உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இப்படத்தினை எழுதி இயக்கியிருக்கும் லோக பத்மநாபன், நாம் பத்திரிகை செய்திகளாக படித்து விட்டு கடந்து போகும் பல கசப்பான சம்பவங்களை, அதிர வைக்கும் காட்சிகளாக நம் கண்முன் நிறுத்தி, இதயத்தினை கனக்க செய்திருக்கிறார்.
செம்பியன் என்கிற கிராமத்தில், தாழ்த்தப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த மாதவி, தந்தையின் கனவை நிறைவேற்றுவதற்காக கல்லூரியில் படித்து வருகிறார். அதே ஊரில் வசிக்கும் நாயகன் வீரா ஒரு கோழிப்பண்ணை நடத்தும் மேல்தட்டு இளைஞனாக வலம் வருகிறார்.
வீரா மாதவியை ஒருதலையாக காதலிக்கிறார். ஆரம்பத்தில் மறுப்பு தெரிவிக்கும் மாதேவி, ஒரு கட்டத்தில் வீராவின் உண்மையான காதலை புரிந்து கொண்டு, வீராவை காதலிக்க தொடங்குகிறார். இவர்களின் காதல் வீராவின் வீட்டிற்குத் தெரிய வருகிறது. இதனையடுத்து இவர்களின் காதல் என்ன ஆனது?
சாதி வென்றதா? காதல் வென்றதா? மனிதம் வென்றதா?? என்பதனை எதிர்பாராத, தைரியமான கிளைமாக்ஸுடன் தந்துள்ளனர்.
மாதவி ஏன் வீராவின் காதலை ஏற்க மறுக்கிறார் என்பதற்கான வலுவான காரணத்தை FLASHBACK கதையில் அழுத்தமாகவும், தொய்வில்லாமலும் சொல்லியிருக்கிறார்கள்.
இந்த திரைப்படத்தில் அமைந்துள்ள அனைத்து பாடல்களுமே கேட்பதற்கு இனிமையாக அமைந்துள்ளது சிறப்பு. “காத்தாடி” மற்றும் “ஏனோடி” பாடல்கள் சிறந்த மெலடி மெட்டுக்கள், இசை ரசிகர்களின் மனங்களில் பல நாட்கள் நிலைத்திருக்கும் ரகம். “பாக்குறா” பாடல் இளைஞர்களுக்கானது, வேல்முருகன் பாடியுள்ள இந்த பாடல் “ஆடுகளம் – ஒத்த சொல்லால” பாடலை நினைவூட்டும் வகையில் உள்ளது.
இந்த படத்தை இயக்கி, இசையமைத்திருப்பதோடு கதையின் நாயகனாகவும் நடித்திருக்கும் லோக பத்மநாபன், எந்த இடத்திலும் நாயகனுக்கான தனித்துவத்தை காட்டாமல், கதையின் நாயகனாக பயணித்து கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.
உயர் சாதி என்று சொல்லிக் கொள்ளும் சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், சக மனிதர்களிடம் எந்தவித பாகுபாடும் காட்டாமல் சமமாக பழகுவது, உறவுகளிடமும் நண்பர்களிடமும் சமாதானமாக போவது, சாதி வெறியர்களால் தனது காதலிக்கு நேர்ந்த கொடுமையை கண்டு கொந்தளிப்பது என உணர்வுப்பூர்வமான நடிப்பினை வெளிப்படுத்தி கைதட்டல் பெறுகிறார்.
நாயகியாக நடித்திருக்கும் அம்சரேகா கதாபாத்திரத்தின் தேவையறிந்து சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளார், கிராமத்து கதாபாத்திரத்திற்கு பொருந்துவதோடு, பாத்திரத்தின் தன்மை அறிந்து தேர்ந்த நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக இறுதிக் காட்சியில் தன் காதலனை திருமணம் செய்துக் கொண்டு வாழ வேண்டும், என்ற எண்ணத்தை அவர் வெளிப்படுத்தும் இடம் வலி மிகுந்ததாக இருக்கிறது. கிளைமாக்ஸ் திருப்பம் யாரும் எதிர்பார்க்காதது, வரவேற்கப்படவேண்டியது.
முதல் படத்திலேயே நடிப்பு மட்டும் இன்றி இயக்கம், இசை மற்றும் தயாரிப்பு என பல களங்களில் பயணித்திருக்கும் லோக பத்மநாபன், தற்போதும் நாட்டின் எதாவது ஒரு பகுதியில் நடந்துக் கொண்டிருக்கும் சாதிய வன்கொடுமைகள் பற்றி தைரியமாக சொல்லியிருப்பதோடு, அதன் பின்னணியில் இருக்கும் அரசியலையும் மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். குறிப்பாக சாதிய வன்கொடுமையில் காதலர்களும், அவர்களது எதிர்கால கனவுகளும் எப்படி சிதைக்கப்படுகிறது என்பதை மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
இப்பொழுது இந்த திரைப்படம் ராஜ் டிஜிட்டல் செயலியில் வெளியாகியுள்ளது
இந்த திரைப்படத்தினை பார்த்து உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.